பொய்களை கூறி வருகிறீர்கள்! – மோடிக்கு கார்கே கடிதம்
மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு நரேந்திர மோடி என்பவர் பிரிவினை மற்றும் வகுப்புவாத பேச்சுகளை பேசிய நபராக மட்டுமே மக்களால் அறியப்படுவார்!! – பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம்.

மே 7ம் தேதி நாட்டின் 12 மாநிலங்களை சேர்ந்த 94 மக்களவைத் தொகுதிகளுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் இடம் பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கூடிய வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரதமர் முன் வைத்திருந்த நிலையில் அதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தை படிக்கும் போது பிரதமர் அலுவலகத்திற்கும் அக்கடித்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் விரக்தியின் உச்சமாக பிரதமர் கடிதம் எழுதி இருப்பதை புரிந்து கொள்ள முடிவதாகவும், காங்கிரஸ் கட்சி குறித்தும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்தும் பிரதமர் கூறிவரும் பொய்களை அவர்களது வேட்பாளர்களும் பெரிதாக வேண்டும் என்பதை பிரதமரின் கடிதத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிவதாக கார்கே விமர்சித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை நாட்டு மக்கள் அனைவரும் அவர்களே படித்துக் கொள்ளக்கூடிய வகையில் அறிவாளிகளே என்றும், காங்கிரஸ் கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் எளிமையானவை மற்றும் தெளிவானவை எனவும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்பு வீரர்களை சீன வீரர்களுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்த பிறகும், கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் சீனர்களை திருப்தி படுத்த முயல்வதை காண்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சீன பொருட்கள் இறக்குமதி 54.76% அதிகரித்துள்ளது என்பதை மல்லிகார்ஜுன் கார்கே கடிதத்தின் மூலம் சுட்டிக்காட்டி உள்ளார்.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்களிடமிருந்து இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி பறிக்க முயல்வதாக கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் ஆனால் இட ஒதுக்கீட்டை 1947 முதல் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்த அமைப்பு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று எனவும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் அதிகரித்துள்ள வேலை வாய்ப்புயின்மை, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு குறித்து எல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பேச மனம் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையும் திட்டமிட்டு பொய்களை பரப்புவதாக கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்தும் தேர்தல் அறிக்கையின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் பிரதமரோ அல்லது பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரோ விவாதத்திற்கு வரலாம் என கார்கே அழைப்பு விடுத்துள்ளதோடு, தேர்தல் முடிவுக்கு பிறகு நரேந்திர மோடி என்பவர் பொய்கள் அடங்கிய பிரிவினை பேச்சுக்கள் மற்றும் வகுப்புவாத பிரச்சனைகளை ஏற்படுத்தியவர் என மட்டுமே உங்களை மக்கள் நினைவு கொள்வார்கள் என அக்கடிதத்தின் மூலம் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.