அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்துள்ளார். அவரது இந்த வருகை, அதிமுகவுடன் நடைபெற உள்ள முக்கிய கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கான முன்னோட்டமாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின், பிற்பகல் 1 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பியூஷ் கோயல் தலைமையிலான பாஜக குழு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த சந்திப்பு சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

இதற்கிடையில், தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜூன் மேக்வால் பாஜக மாநில அலுவலகம் வந்தடைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், கூட்டணி தொடர்பான முடிவுகள் இன்று முக்கிய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்களின் படி, அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கோர உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 54 சட்டமன்றத் தொகுதிகளை கட்சி ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறவுள்ள சிறு கட்சிகளுக்காகவும் சேர்த்து, மொத்தமாக சுமார் 70 தொகுதிகள் வரை கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக–அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து அமைச்சர் ரகுபதி ஏற்கனவே விமர்சனம் முன்வைத்திருந்தார். அதிமுக அணிகளை ஒன்றிணைப்பதற்காகவே பியூஷ் கோயல் சென்னை வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே நேரத்தில், சென்னை வந்துள்ள பியூஷ் கோயலை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஐடிசி நட்சத்திர விடுதியில் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செவிலியரின் பணி நிரந்தர கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்


