என்.கே.மூர்த்தி பதில்கள்
மணிமாறன் – கோடம்பாக்கம்
கேள்வி – அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது என்கிறார்களே, உண்மையா?
பதில் – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வந்ததில் இருந்து தொடர்ந்து சரிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது.
இப்போது அவருக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் அதிமுகவில் உள்ள அடுத்த கட்ட தலைவர்களை திருப்திபடுத்த, அந்த தலைவர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள கூட்டணி அமைத்தே தீரவேண்டும் என்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.
ஆனால் நடிகர் விஜய்க்கு அந்த நிலை இல்லை. அவர் இப்போது தான் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதுவும் அவர் முதலமைச்சர் கனவோடு கட்சியை தொடங்கியிருக்கிறார். அந்த கூட்டணி எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
ஒரு தகவல், மதுரையில் நடிகர் விஜய்யுடன் அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. அப்போது விஜய்க்கு 60 தொகுதிகள் வரை வழங்கவதாக பேசியுள்ளனர். கூடுதலாக துணை முதலமைச்சர் பதவி கொடுக்கவும் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எந்தளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
சங்கர் – கள்ளக்குறிச்சி
கேள்வி- தமிழ்நாட்டில் தமிழை அண்ணா வளர்க்கவில்லை ஆன்மீகம் தான் வளர்த்தது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கவனித்தீர்களா?
பதில் – அக்காவின் நிலமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது “திராவிட நல்” என்ற வரியை பாடும் போது தவிர்த்து விட்டார்கள். அது ஆளுநர் உத்தரவு படி திட்டமிட்டு தவிர்க்கப்பட்டது என்றும் இல்லை தெரியாமல் நடந்துவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ஆளுநர், அது தவறுதலாக விடுப்பட்டுள்ளது, வருங்காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்று சொல்லி இருந்தால் அப்போதே அந்த சலசலப்பு முடிந்திருக்கும். இரண்டாவது பாஜக தலைவர்கள் பேசும் போது அந்த தவறை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். தவறு நடந்து விட்டது. “தமிழ்த்தாய் வாழ்த்து” என்பது மாநில அரசுனுடைய அதிகாரப் பூர்வமான பாடல். அதை பிழை இல்லாமல் பாடியிருக்க வேண்டும். வருங்காலத்தில் அதுபோன்ற தவறு நடக்கக்கூடாது என்று பேசி இருக்க வேண்டும். இவர்கள் எல்லோரும் ஆளுநரை பாதுகாக்க முயற்சி செய்கிறார்களே தவிர தமிழ்நாடு அரசின் உரிமையைப் பற்றி கவலைப்பட வில்லை.
திமுக எதிர்ப்புக்கும், தமிழ்நாடு அரசு உரிமைக்கும் வித்தியாசம் தெரியாத தலைவர்களாக இருக்கிறார்கள்.
மாதவன் – மதுரவாயல்
கேள்வி – விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு தொடந்து முதல்வர், துணை முதல்வர் ஆசையை காட்டி வருகிறார்களே?
பதில் – திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆகுவதற்கு தகுதி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூன் கொளுத்தி போட்டார். அது புகைந்து அண்ணன் திருமாவளவனை முதலமைச்சராக்குவேன் என்று சீமான் ஒரு வெடியை வெடித்தார். இவர்கள் யாரும் திருமாவளவனை பற்றி அறியாதவர்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தி என்பதில் அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். அதேபோன்று தமிழக அரசியலில் தற்போது உள்ள தலைவர்களில் அரசியல் முதிர்ச்சியும், அரசியல் தெளிவும் உள்ள தலைவர் திருமாவளவன் மட்டுமே. எது நடைமுறைக்கு சாத்தியம், எது சாத்தியமில்லை என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதனால் அவரை யாரும் ஏமாற்ற முடியாது.
ஷேக் தாவூத் – ஆவடி
கேள்வி – 2026 ல் நடிகர் விஜய் ஆட்சியை பிடித்து விடுவாரா? அவர் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும்?
பதில் – தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை(27-10-2024) நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் அவர் அறிவிக்க போகும் கொள்கை என்ன என்பதைப் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை.
ஆனால் அவருடைய இலக்கு 2026ல் ஆட்சியை பிடிப்பது. அதை மனதில் வைத்துதான் கட்சியை தொடங்கி இருக்கிறார். அது சாத்தியமா? சாத்தியம் இல்லையா? என்று கேட்டாள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நடிகர் விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பீடு செய்கிறார்கள். எம்ஜிஆர் என்பவர் தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற பெரும் சிந்தனையாளர்களுடன் அரசியல் பாடம் படித்தவர். அவர் 1972ல் அதிமுகவை ஆரம்பித்தபோது அவருடன் அரசியல் அனுபவம் வாய்ந்த அடுத்த நிலையில் இருந்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பா.உ.சன்முகம், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற அனுபவம் வாய்ந்த அடுத்த நிலை தலைவர்கள் ஏராளமானோர் இருந்தார்கள். அவர்கள் எம்ஜிஆரின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அது சாத்தியமானது.
அடுத்தது எம்ஜிஆர் காலத்தில் சினிமா என்பது மக்களுக்கு அறிமுகமான காலம். பெரும்பாலான மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு சினிமா மீதும், அதில் நடித்த நடிகர்கள் மீதும் ஒரு வித ஈர்ப்பு இருந்தது. அப்போது அது எம்ஜிஆருக்கு சாதகமாக அமைந்தது.
தற்போது அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்க்கக் கூடிய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். சினிமா மோகம் என்பது அப்போது போல் தற்போது இல்லை. நடிகர் விஜய்க்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை. அந்த ரசிகர்கள் ரஜினிக்கு இருந்தார்கள், கமல்ஹாசனுக்கு இருந்தார்கள், விஜய்காந்துக்கு இருந்தார்கள். ஒவ்வொரு நடிகருக்கும் 8-10 சதவீதம் வாக்காளர்கள் இருப்பார்கள். அதேபோன்று தான் தற்போது நடிகர் விஜய்க்கும் இருக்கிறார்கள்.
அந்த 10 சதவீதம் ரசிகர்களை(வாக்காளர்களை) அவர் எந்த கொள்கையின் அடிப்படையில் வழி நடத்தப்போகிறார் என்பதில் இருந்துதான் அவருடைய வெற்றி அடங்கி இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக கொள்கை நிலைப்பாட்டை, ஜிஎஸ்டி, நீட், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் மாநிலத்திற்கான அதிகாரம் போன்ற அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்க போகிறாரா? எதிர்க்க போகிறாரா? அவர் எதுபோன்ற அரசியல் நிலைப்பாட்டை எடுக்க போகிறார் என்பதை பொறுத்துதான் அவருடைய எதிர்காலம் இருக்கிறது.
இறுதியாக கருவாட்டு குழம்பு என்பது தனி, சாம்பார் என்பது தனி இரண்டையும் ஒன்றாக கலந்து கருவாட்டு சாம்பார் என்கிற நிலைப்பாட்டை நினைக்கவே கஷ்டமாக இருக்கும். அதை போன்றுதான் அரசியலும். ஒன்று கருவாடாக இருக்க வேண்டும் அல்லது சாம்பாராக இருக்க வேண்டும். இரண்டையும் கலந்த கருவாட்டு சாம்பார் அரசியல் மக்களிடம் எடுபடாது.
வாழ்க்கையில் சிலர் மட்டுமே வெற்றிப் பெறுகிறார்கள், காரணம் என்ன? – என்.கே மூர்த்தி