சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பியுள்ளதால ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த ஏலத்தில் சென்னை அணி எந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனை பூர்த்தி செய்திடும் வகையில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியது. அஸ்வின் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அவர் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல், சென்னை அணியின் தொடக்க வீரரான நியூசிலாந்தை சேர்ந்த டெவான் கான்வேயை ரூ.6.25 கோடிக்கு அணி நிர்வாகம் தக்க வைத்தது. இதேபோல், நியூசிலாந்தை சேர்ந்த மற்றொரு வீரரான ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.
இன்றைய ஏலத்தில் சென்னை அணிக்கு புது வரவாக ராகுல் திரிபாதியை ரூ.3.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதனிடையே, புதிய வீரர்கள் வரவை சென்னை அணி சிறப்பு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.