டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலாவது பேட்டிங்கில் 205 ரன்கள் குவித்துள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள டேரன் சம்மி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க மறுபுறம் களமிறங்கிய ரோகித் சர்மா பந்தை நாலாபுறம் சிதறடித்து 92 ரன்னில் போல்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 15 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் குவித்தது. பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.