ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை இரண்டாவது பேட்டிங்கில் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 61வது லீக் போட்டி நடைபெற்றது. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 61வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், போக போக விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய சிம்ரஜீத் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 27 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்து ஆடிய ருத்ராஜ் கெய்க்வாட் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் 22 ரன்களிலும் மோயின் அலி 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை தக்க வைத்தது. சென்னை அணியின் ஆட்டநாயகனாக சிம்ரஜீத் சிங் தேர்வு செய்யப்பட்டார்.