இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை டி-20 தொடரில் தோற்கடித்ததன் மூலம் மறக்கமுடியாத வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றியது. இந்த வெற்றியில், இளம் கிரிக்கெட் வீரர்கள் திலக் வர்மாவும், அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனும் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகித்தனர். வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் முக்கிய பங்காற்றினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் இருந்தார். இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், ‘‘தனது அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். தொடர் முழுவதும் எங்கள் வீரர்கள் செயல்பட்ட விதம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது சிறப்பான முயற்சியின் பலனாகும். சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஞ்சு சாம்சன், திலக் பேட்டிங்கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தியின் செயல்பாடு அசாதாரணமானது.
ஒட்டுமொத்த அணியும் ஒருவரையொருவர் வெற்றியை அனுபவித்து விளையாடிய விதம் அளப்பரியது. இந்த வீரர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இந்த மறக்கமுடியாத வெற்றிக்கு வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி 3 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்தது. முதல் போட்டியில் 202 ரன்களை குவித்த இந்திய வீரர்கள் மூன்றாவது போட்டியில் 219 ரன்கள் எடுத்தனர். தொடரின் கடைசி போட்டியில் இந்தியா 283 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20யில் எந்த அணியும் இவ்வளவு மிகப்பெரிய ரன்களை குவித்தது இல்லை.