ஐபிஎல் – மும்பையை வீழ்த்தி முன்னேறுமா சென்னை?
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை மும்பை அணிகள் பல பரீட்சை நடத்த உள்ளன.
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என வர்ணிக்கப்படும் இந்த போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

சென்னை அணி 11 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் மும்பை கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் ஐந்தில் வென்று ஆறாவது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி 6 போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெற்றது. இன்றும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கலாம். சேப்பாக்கம் சூழலுக்கு ஒத்துழைக்கும் என்று தெரிந்து வைத்திருக்கும் மும்பை பேட்ஸ்மேன் இசன் கிஷன் எவ்வித சூழலையும் எதிர்கொள்ள தயார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வலை பயிற்சியில் மலிங்காவின் பந்தை எதிர்கொண்ட அனுபவம் அவரைப்போலவே பந்து வீசும் பத்திரனாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள உதவியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நடப்பு சீசனில் மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இன்றைய போட்டியில் மும்பை பழிதீர்க்க முயற்சிக்கலாம். ஒருவேளை சிஎஸ்கே வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஒருவேளை சேப்பாக்கத்தில் மும்பையின் வெற்றி நடை தொடருமானால் மும்பை அணி முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.