பாகிஸ்தானில் கிரிக்கெட் விவகாரங்களின் நிலை ஏற்கனவே சீர்குலைந்து இருந்தது. ஆண்கள் தேசிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் நேர்மறையான முடிவுகளைப் பெற போராடி வருகிறது. இப்போது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்திய இழப்புகள், வாரியத்தின் பாக்கெட்டில் ஒரு பெரிய ஓட்டையை போட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு 85 மில்லியன் அமெரிக்க டாலர்களை அதாவது ரூ.869 கோடி அளவிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு ஆட்டத்தை மட்டுமே விளையாடியது.
நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபியின் முதல் குரூப் ஏ போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. பின்னர் துபாய்க்குச் சென்று இந்தியாவை எதிர்கொண்டது. பங்களாதேஷுக்கு எதிரான அவர்களின் மூன்றாவது மற்றும் இறுதி குரூப் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் கைவிடப்பட்டது. நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிரான தோல்விகளால், பாகிஸ்தான் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் ஒரே ஒரு உள்ளூர் போட்டியுடன் போட்டி முடிவுக்கு வந்தது.
டெலிகிராப் இந்தியாவில் வெளியான ஒரு செய்தியில், பாகிஸ்தான் தனது மூன்று சாம்பியன்ஸ் டிராபி மைதானங்களை – ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி – மேம்படுத்த சுமார் சுமார் $58 மில்லியன் செலவிட்டது. மேம்படுத்தலுக்கான செலவு எதிர்பார்த்த பட்ஜெட்டை விட 50 சதவீதம் அதிகமாக இருந்தது.
பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களின் வருவாய் உண்மையில் மிகக் குறைவாகவே இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹோஸ்டிங் கட்டணத்தின் ஒரு பகுதியாக 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது. டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப்களைப் பொறுத்தவரை, வருவாய் மிகக் குறைவு.
எனவே, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுமார் ரூ.869 கோடி இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆகையால் உள்ளூர் டி20 சாம்பியன்ஷிப்பிற்கான போட்டி கட்டணத்தை 90 சதவீதம் குறைக்கவும், இருப்பு வீரர்களின் பணப்படிகளை 87.5 சதவீதம் குறைக்கவும் நிர்வாகம் முடிவு செய்தது.
பாகிஸ்தானின் டான் செய்தித்தாளின்படி, “சமீபத்தில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டி கட்டணத்தை ரூ.40,000 லிருந்து ரூ.10,000 ஆகக் குறைத்தது. இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி தலையிட்டு, முடிவை நிராகரித்து, வாரியத்தின் உள்நாட்டு கிரிக்கெட் துறையை இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டார். வீரர்களுக்கான 5 நட்சத்திர தங்குமிடங்கள் கூட எகானமி ஹோட்டல்களுடன் மாற்றப்பட்டன.