
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் குவித்துள்ளது..
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 8வது லீக் போட்டியில் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு ஐதராபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐதராபாத் அணியானது தனது தொடக்க லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. மும்பை அணியை பொறுத்தவரையில் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 12 முறையும், ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 11 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களும் எடுத்தனர. அடுத்து களமிறங்கிய அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அணியின் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் குவித்து மும்பை அணிக்கு மெகா இலக்காக நிர்ணயித்தது. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி குவித்த 263 ரன்னை, தற்போது ஐதராபாத் அணியானது முறியடித்து 277 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்துள்ளது.