ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அதிமுகவில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தவளாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம், கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மேலும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தவளாய் சுந்தரத்தை மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில், 40 நாட்களில் தற்போது மீண்டும் தளவாய் சுந்தரத்துக்கு, அதே பொறுப்புகளை வழங்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வல தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக தளவாய் சுந்தரம் உரிய விளக்கம் கேட்டு, பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் வகித்து வந்த அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இன்று முதல் மீண்டும் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


