மாதம்பட்டி ரங்கராஜால் இதுவரை 10 மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை தொடர்பு கொண்டு புகார் கூறியதாகவும் வழக்கறிஞர் சுதா எம்.பி, தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தொழிலில் மிகப் பிரபலமானவர். தொழிலதிபர்கள், அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரின் இல்ல விசேஷங்களில் கட்டாயம் மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் சர்வீஸ் இடம்பெற்றிருக்கும் அளவுக்கு பாப்புலராக இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வந்த மாதம்பட்டி ரங்கராஜ், அண்மைக்காலமாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ருதி என்பவருடம் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 2வது திருமணம் செய்து கொண்டார். திருமணமான அடுத்த நாளே, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிஸில்டா அறிவித்தார். பின்னர் சில நாட்களிலேயே கர்ப்பமாக இருக்கும் தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளித்தார். இந்தச்சூழலில் தற்போது மீண்டும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். அப்போது அவருடன் மக்களவை உறுப்பினரும் , வழக்கறிஞருமான சுதாவும் உடனிருந்தார்.
அப்போது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் செய்தியாளர்களிடம் பேசிய சுதா எம்.பி., , “தமிழ்நாடு மகளிர் ஆணையத்திடம் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் ஜாய் கிரிஸ்டில்லாவை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரை இதுவரை ஏற்காமல் அனைத்து காவல் நிலையங்களிலும் தொடர்பு கொண்டு எங்கள் எல்லைக்குள் வரவில்லை என தெரிவிக்கின்றனர். ஆயிரம் விளக்கு பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தோம். யாருக்கு எதிராக புகார் அளித்தோமோ அவரை இதுவரை விசாரணைக்கு அழைத்ததாக தெரியவில்லை. ஆனால் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை மேற்கொண்தாகவும், ஊடகத்தின் பார்வை படாதவாறு காவல்நிலைத்தின் பின் வழியாக அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளியாகியது. புகார் அளித்து 1.5 மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
தமிழ்நாடு மகளிர் ஆணையம் மீதும், தமிழ்நாடு அரசு மீதும் நம்பிக்கை வைத்து புகார் அளித்துள்ளோம். பிறக்கவுள்ள குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். குழந்தை எந்த நேரத்திலும் பிறக்கும் சுழலில் தன் தகப்பன் யார் என்று தெரியாத நிலையில் குழந்தை பிறக்க கூடாது. வழக்கமாக காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தால் மாலைக்குள் தொடர்புடையவரை விசாரணைக்கு அழைப்பார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி அணுமுறையை காவல்துறை காட்டி வருகிறது என தோன்றுகிறது. மாதம்பட்டி ரங்கராஜால் இதுவரை 10 மேற்பட்ட பெண்கள் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களை தொடர்பு கொண்டு புகார். மாதம்பட்டி ரங்கராஜ் மீது 10க்கு மேற்பட்ட பெண்கள் விரைவில் புகார் அளிக்க உள்ளனர்.” என்று தெரிவித்தார்.