திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம். இவர் நேற்றிரவு 9-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் லோகேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கரிபிரான் ஆகியோருடன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வனவிலங்கு வேட்டைக்காக சென்றுள்ளார். இதனிடையே, அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுப்பதற்காக சட்ட விரோதமாக மின்வேலி பொருத்தியுள்ளார்.
இதனை அறியாத சிங்காரம் உள்ளிட்ட 3 பேரும் வேட்டை முடிந்து அந்த வழியாக திரும்பியுள்ளனர். அப்போது, மின்சாரம் தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரிசிலாப்பட்டு போலீசார், உடல்களை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்