இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட, நாகப்பட்டினம் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கொழும்பிலிருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வந்தனர்.


தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்கள், கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 2 படகுகளில் சென்று, இந்திய கடல் எல்லையில் மீன்கள் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், அங்கு வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் 16 பேரையும் கைது செய்தனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்ததோடு, மீனவர்கள் பிடித்திருந்த மீன்கள், மீன் பிடி வலைகள் ஆகியவற்றையும் கைப்பற்றி, இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பின்பு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 16 மீனவர்களையும் இலங்கை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மீனவர்களின் குடும்பத்தினர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இதை அடுத்து ஒன்றிய அரசு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்து, இலங்கை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் பேசி, சிறையில் இருக்கும் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் இம்மாதம் இரண்டாம் தேதி, இலங்கை நீதிமன்றம், சிறையில் இருந்த புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்கள் 16 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16 மீனவர்களும் இலங்கை உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்கள் 16 பேரையும் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இவர்களுக்கு பாஸ்போர்ட் விசா போன்றவைகள் இல்லாததால், 16 பேருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர். அத்துடன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
மீனவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த பின்பு, இன்று அதிகாலை இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து, சென்னைக்கு வரும், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 16 மீனவர்களும் அரசின் செலவில், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 16 பேரையும் வரவேற்று, அரசு வாகனங்களில் அவர்களை நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலுக்கு அனுப்பி வைத்தனர்.
