கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டும், படுகாயம் அடைந்தும் 16 பெண்கள், 9 குழந்தைகள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மதியம் கருர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், கரூரில் கூட்டநெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது தொடர்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி நிர்மல்குமார் மற்றும் த.வெ.க. கரூர் மாவட்ட நிர்வாகிகள் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் என்பவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.