தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு.மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் 13 பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

நாமக்கல்- சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜாதா (38) இவரது மாமியார் கவிதா (58) குழந்தைகள் கலையரசி(14) பூபதி (12) உறவினர் சுனோஜ் (38) ஆகியோர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகத்தில் ஷவர்மா பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிறுமி கலையரசி இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.மற்ற 4 பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாளாகும். இதனையொட்டி அவருடைய நண்பர்கள் 13 பேர் நாமக்கல் – பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சவர்மா சாப்பிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் (ஞாயிற்றுக்கிழமையான) நேற்று காலை திடீரென 13 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா, மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
மேலும் பரமத்தி சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஆய்வு செய்தார்.மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என உணவக உரிமையாளர் நவீன்குமாரிடம் கேட்டறிந்தார்.மேலும் கிச்சன் அறையை பார்வையிட்ட அவர் சிக்கன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும், உணவகத்தை சீல் வைக்கவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி சிக்கன்களை பினாயில் கொண்டு அழித்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உணவகத்திற்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


