பெரியபாளையத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பக்தர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து இரவு தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை வேண்டுதலை நிறைவேற்றி செல்வது வழக்கம். சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் என்பவர் தமது உறவினர்களுடன் நேற்றிரவு வந்து பெரியபாளையம் தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். சாமி தரிசனம் முடித்து நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு மீண்டும் விடுதிக்கு சென்றுள்ளனர். மாலை ரமேஷின் 10வயது மகன் நித்தீஷ் விளையாடி கொண்டிருந்த போது சுற்றுச்சுவரில் சாய்த்து வைத்திருந்த இரும்பு கேட் சிறுவன் மீது சரிந்து விழுந்தது. இதில் சிறுவன் நித்தீஷ் உடல் நசுங்கி துடிதுடித்து அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர்.
சிறுவனை பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் விடுதியின் அலட்சிய போக்கு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். வேண்டுதலுக்காக வந்த இடத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
