தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசை நோக்கிப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 
எதார்த்தத்தை மீறிய கடன் சுமை!
தவெக அரசாங்கத்தைப் பொறுத்தவரை, நாளுக்கு நாள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, இதுவே தற்போதைய நிதிக் சூழலின் எதார்த்தமான உண்மை என்றார். திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ₹10,98,768 கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

சரமாரி கேள்விகளை எழுப்பிய எடப்பாடி பழனிசாமி
“தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே சுமார் ₹20,000 கோடி அளவுக்குப் புதிய கடன்களை வாங்கியுள்ளதோடு, ₹17,000 கோடியை வருவாய்ச் செலவாக மேற்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நிதிப் பற்றாக்குறை ₹1,21,189 கோடியையும் வருவாய்ப் பற்றாக்குறை ₹55,750 கோடியையும் தாண்டியுள்ள நிலையில், புதிய வருவாய் ஆதாரங்கள் ஏதுமின்றி இந்த பிரம்மாண்டமான கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையை அரசு எவ்வாறு சரிசெய்யப் போகிறது என்றும், நிலுவையில் உள்ள கடன்களை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறது என்றும் எந்தவொரு தெளிவான விளக்கமும் இந்த பட்ஜெட்டில் இல்லை எனக் கடுமையாகச் சாடினார்.”
பழைய திட்டங்களின் ‘மறுவடிவம்’!
திமுக ஆட்சிக் காலத்தில் எப்படி வர்ணஜாலம் செய்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமோ, அதே பாணியைத்தான் தவெக அரசும் பின்பற்றியுள்ளது என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, முந்தைய திட்டங்களுக்குப் பெயர்களை மட்டும் மாற்றிவிட்டுப் புதிய அறிவிப்புகள் போல இந்த பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் முறையாக நிறைவேற்றாமல், வெற்று அறிவிப்புகளுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
“பழைய திட்டங்களுக்குப் புது பெயிண்ட்!” – தவெக பட்ஜெட்டை விளாசிய தமிமுன் அன்சாரி!
