சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியது. இதை கண்ட மலை கிராம மக்கள் ஆச்சரியமடைந்தனர். கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஹெலிகாப்டரில் வந்த முக்கிய பிரமுகர் பெங்களூரை சேர்ந்த ஆன்மீக குருவும், வாழும் கலை நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் இவருடன் மூன்று உதவியாளர்கள் மற்றும் பைலட் ஆகிய நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் பெங்களூரில் இருந்து திருப்பூர் சென்று அங்கு நடைபெற உள்ள ஒரு விழாவிற்காக தனியார் ஹெலிகாப்டர் மூலம் வந்தது தெரிய வந்தது.
இன்று காலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் இயக்க முடியாமல் மலை கிராமத்தில் தரை இறக்கியதாக தெரிவித்துள்ளனர். சுமார் 40 நிமிடங்கள் உகினியம் கிராமத்தில் காத்திருந்தனர். அதன் பின்னர் மீண்டும் வானிலை சரியான பிறகு அங்கிருந்து, ஹெலிகாப்டர் மீண்டும் திருப்பூர் நோக்கி சென்றது. ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் கடம்பூர் மலைப்பகுதியில் மழை கிராம மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
