தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு சுமார் 304 மீட்டர் நீளம் கொண்ட பெரிய வகை சரக்கு கப்பல் முதல் முறையாக வந்தடைந்தது.


துாத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022 மே மாதம் 299.50 மீட்டர் நீளம் கொண்ட எம்.வி. எம்.எஸ்.சி. பெட்ரா என்ற சரக்கு கப்பல் வந்தது சாதனையாக கருதப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தின் தக்ஷின் பாரத் கேட்வே சரக்கு பெட்டக முனையத்திற்கு 304 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட எம்.வி., எம்.எஸ்.சி, மைக்கேலா என்ற கப்பல் நேற்று வந்தடைந்தது. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், உள்ளிட்ட துறைமுக அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தியாவில் கடல்சார் துறை வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் விதமாக தற்போது 304 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் முதல்முறையாக கையாளப்பட்டு உள்ளது. பனாமா நாட்டில் உள்ள கொலோன் துறைமுகத்தில் இருந்து 6,724 கன்டெய்னர் பெட்டிகளுடன் வந்த எம்.எஸ்.சி. மைக்கேலா என்ற சரக்குபெட்டக கப்பல், வ.உ.சி. துறைமுகத்தில் 3,977 கன்டெய்னர் பெட்டிகளை இறக்குமதி செய்தது. மீதி கன்டெய்னர் பெட்டிகள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை துறைமுகத்தில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 928 கன்டெய்னர் பெட்டிகள் கையாளப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே கால கட்டத்தில் 5 லட்சத்து 20 ஆயிரத்து, 919 கன்டெய்னர் பெட்டிகள் கையாளப்பட்டது. தற்போது 8.06 சதவீதம் துறைமுகம் வளர்ச்சி அடைந்துள்ளது. 304 மீட்டர் நீளம் கொண்ட மைக்கேலா சரக்கு கப்பலை வெற்றிகரமான கையாண்டது துறைமுகத்தின் சமீபத்திய உள்கட்டமைப்பு மேம்பாடுகளை பிரதிபலிக்கிறது.
அதிகபட்ச மிதவை ஆழத்தை 14.20 மீட்டராக உயர்த்துதல், துறைமுக கப்பல் சுற்றுவட்ட பாதையினை 488 மீட்டரில் இருந்து, 550 மீட்டராக விரிவுபடுத்துதல் என வர இருக்கும் வெளி துறைமுக திட்டம், தென் இந்தியாவிற்கான முக்கிய கடல் வர்த்தக நுழைவாயிலாக துாத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் நிலையை குறிப்பிடத்தக்க அளவில் வலுப்படுத்தும் என துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் தெரிவித்தார்.


