வங்கக்கடலில் வரும் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று எண்ணூர் அருகே கரையை கடந்தது. எனினும் சென்னையில் கடந்த 16ம் தேதி மாலையுடன் மழையின் தாக்கம் குறைந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது தமிழகத்தில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில், வரும் 22ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகாவில் மிதமான மழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலங்கானாவில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.