அதிமுக உடையவும் இல்லை; சிதறவும் இல்லை- எடப்பாடி பழனிசாமி
மதுரையில் ஆக.20-ல் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அடுத்துவரும் தேர்தலுக்கு அடித்தளமாக மதுரை மாநாடு அமையும். தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டது வேதனைக்குரியது. கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டது. தற்போதுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டியை மட்டுமே கொடுத்துவருகிறார். சளி தொல்லைக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசி போட்டுள்ளனர். இரு கைகளும் இழந்தவருக்கு அதிமுக ஆட்சியில் கைகள் பொருத்தப்பட்டன.


அதிமுக உடையவும் இல்லை. சிதறவும் இல்லை, கட்டுக்கோப்பாக உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறக்காமல் தமிழ்நாடு விவசாயிகளுக்கு கர்நாடக அரசு துரோகம் செய்துள்ளது. இந்தியாவை ஒருங்கிணைப்பேன் எனக் கூறும் முதலமைச்சர் கர்நாடக காங்கிரசிடம் ஏன் பேசவில்லை? கர்நாடக முதலமைச்சரிடம் பேசி தமிழகத்திற்கான தண்ணீரை முதலமைச்சர் பெறாதது ஏன்? காவிரி மேலாண்மை ஆணையம் முறையாக செயல்படும் நிலையில் எதற்காக பிரச்சனையை உருவாக்க வேண்டும்? தமிழகத்தில் திமுக ஆட்சியில் நிர்வாக திறமையே இல்லை. தூக்கத்தில் இருந்து விடியா திமுக அரசு விழிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை ஆராய்ந்து நிறைவேற்றும் எண்ணம் விடியா திமுக அரசுக்கு இல்லை. சபாநாயகராக தனபால் இருந்தபோது அவரை கீழே தள்ளியவர்கள்தான் திமுகவினர்” என்றார்.


