சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுகவின் அனைத்து பிரிவு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்க நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழகத்தில் அதிமுக தலைமையிலான எம்ஜிஆர் ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் சரி தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கூட ஆகாத நிலையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, அனைத்து பொருள்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் திட்டங்களை முடக்கிய ஆட்சி திமுக.
ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எந்த முகத்துடன் தமிழக மக்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு கேட்பார்? பணத்தை வாரி இறைத்து மக்களை ஏமாற்ற திமுக நினைக்கிறது. அதிமுகவினரை வழிமறித்து கேள்வி கேட்கும் தகுதி மக்களுக்கும், பதில் கூறும் தகுதி எங்களுக்கும் உண்டு. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கான திட்டங்களை இன்னமும் 30 வருடங்களுக்கு நிறுத்தக்கூடாது. திமுக ஆட்சியில் புதிய சாலை, புதிய பாலம் அமைக்கப்படவில்லை. புதிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தவும் இல்லை. தமிழக மக்களுக்காக உழைப்பது எங்கள் உரிமை. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உங்கள் கடமை” என்றார்.
