அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்- ஓபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படுகின்றன. அப்போது வழக்கில் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார், வழக்கையும் வாபஸ் பெற தயாராக இருக்கிறோம் என தெரிவித்தது.
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தற்போது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவும் வேண்டும். இந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டால் ஓபிஎஸ் உட்பட மேலும் பலர் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகள் நீக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் நிறைவடைந்த பின்னர் பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளது.