கிருஷ்ணகிரியில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை 1வது கிராஸ் மற்றும் காந்தி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த இரு அம்மா உணவகங்களிலும் தலா 12 பேர் என மொத்தம் 24 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 2015 மே, 24ம் தேதி முதல் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு 250 ரூபாய் நாள் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மா உணவக ஊழியர்களை திடீர் ஆட்குறைப்பு செய்வதாக கூறி நகராட்சி அலுவலகம் முன் அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், “நகராட்சி சங்கங்களில் இருந்த எங்களை அப்போதைய அ.தி.மு.க., அரசு அம்மா உணவகத்தில் ஊழியர்களாக பணியமர்த்தினர். தினந்தோறும் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்றுகிறோம். கொரோனா காலகட்டங்களில் காலை முதல் இரவு வரை வேலை பார்த்துள்ளோம். அதற்காக எங்களுக்கு ஊதிய உயர்வு கூட அளிக்கப்படவில்லை. தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகத்தை மூடவோ ஊழியர்களை இடைநிறுத்தமோ செய்ய மாட்டோம் என உறுதியளித்தது. ஆனால் கிருஷ்ணகிரி நகராட்சி ஆனையாளர் சுந்தராம்பாள், ஒரு அம்மா உணவகத்திற்கு ஆறு பேர் மட்டுமே வேலை செய்ய வேண்டும். மற்றவர்கள் வேலையில் இருந்து விலகி விடுங்கள் என கூறுகிறார். எங்கள் வருகை பதிவேட்டிலும் கையெழுத்து வாங்கவில்லை. தங்களை இந்த வேலையில் இருந்து நீக்க கூடாது என்று நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் புகார் அளித்துள்ளோம்” என தெரிவித்தனர்.
