மண்ணுக்கடியில் வைரமே கிடைத்தாலும் வேண்டாம் என்பதுதான் விவசாயிகளின் நிலைபாடு- டிடிவி தினகரன்
மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே NLC நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் காவிரி டெல்டா பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்களை கபளிகரம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டங்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். ‘மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும்’ என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு. ஆகவே, மாநில அரசு இது வெறும் ஆய்வுப்பணிதான், சுரங்கம் அமைக்கப்படபோவதில்லை என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைப் போல மக்களை ஏமாற்றாமல், இந்த ஆய்வுப்பணிக்காக விடப்பட்ட டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவதற்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.
தும்பை விட்டு வாலை பிடிப்பதைவிட ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.