நாம் தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தனது ஆதராவளர்கள் உடன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அண்மை காலமாக அக்கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். சீமான் தங்களது கருத்துக்களை கேட்பதில்லை என்றும், கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க இரண்டாம் கட்ட தலைவர்களான சாட்டை துரைமுருகன் போன்றோர் அனுமதிப்பதில்லை என்று குற்றம்சாட்டி பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்கள் விலகி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த சுப்பையா பாண்டியன் இன்று தனது ஆதரவாளர்கள் 32 பேருடன் இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா பாண்டியன், தாங்கள் கட்சியில் விலகுவதற்கு சாட்டை துரைமுருகன் தான் காரணம் என தெரிவித்தார். சீமான் பெரிய அறிவாளிதான் என்றும், ஆனால் அவர் மோசமான நிர்வாகி என்றும் சுப்பையா பாண்டியன் குற்றம்சாட்டினார். நாம் தமிழர் கட்சிக்குள் சீமான் யாரையும் மதிப்பது இல்லை என்றும் யாரையுடைய பேச்சையும் அவர் கேட்பதில்லை என்றும் சுப்பையா பாண்டியன் கூறினார்.