அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் சட்டவிரோதமானது என்று கூறி, அவர்களை உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பணி நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஒரே நாளில் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, அதே நாளிலேயே நேர்காணலும் நடத்தப்பட்டு ஆட்கள் சேர்க்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த அவசரப் பணி நியமனத்தில் கடுமையான விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி, ஈஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்புகள்
இந்த வழக்கை முதலில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, மனுதாரருக்கு இதில் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஈஸ்வரி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த ஜூன் 18, 2026 அன்று விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, 54 பேரின் பணி நியமனங்களையும் சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் பணியிழந்தவர்கள், தங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுவை விரிவாக விசாரித்த நீதிபதிகள், ”கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் கடுமையான விதிமுறை மீறல்களும், சட்டவிரோதமும் இருப்பது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு முற்றிலும் சரியானது; அதை நாங்கள் உறுதி செய்கிறோம்.” என்று கூறி, பணியிழந்தவர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 54 பேரையும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.இந்தத் தீர்ப்பு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது நடந்த நியமன விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை கைவிடுக: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
