உதகை முஸ்லிம் பெண் கொலை குறித்து சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் விதமாக வதந்தி பரப்பிய விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி வெற்றிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள காந்தல் பகுதியை சேர்ந்த ஆஷிகா பர்வீன் (22) என்ற பெண், அண்மையில் காபியில் சையனைடு விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக உதகை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஆஷிகா பர்வீன் ஒரு இந்து பெண் என்றும், அவரை இஸ்லாமியராக மாற்றி வரதட்சணை கொடுமை செய்து கொன்றதாகவும் சமூக வலைதளங்களில் வன்முறை தூண்டும் விதமாக தவறான தகவல் பரவியது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த உதகை காவல் துறையினர், ஆஷிகா பர்வீன் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் குறித்து விசாரித்து வந்தனர். அதில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் என்பவர் ஆஷிகா பர்வீன் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, பாஜக நிர்வாகி வெற்றிவேலை சைபர் க்ரைம் போலீசார் கைதுசெய்து, விசாரணைக்காக உதகைக்கு அழைத்துச் சென்றனர்.