பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் க்ரைமில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்துள்ளாா்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் அவருடைய இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டு இருந்ததாக மருத்துவர் ராமதாஸ் கடந்த 11 ஆம் தேதி விருதாசலத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 12 ஆம் சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரிகள் ஐந்து பேர் பாமக நிறுவனமர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தை முழுமையாக சோதனையிட்டனர்.
தனியார் துப்பறியும் நிறுவனம் ஒட்டு கேட்போம் கருவியை ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் அவருடைய இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைத்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
