
சென்னையில் தொடர்ந்து, சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்; அவசர மற்றும் மீட்பு உதவிக்கு 1913 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் அழைக்கலாம். சென்னையில் 35 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை தரைக்காற்று வீசக்கூடும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை!
மோசமான வானிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 10- க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாததால், பெங்களூவிற்கு திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 278 ஏரிகள் நிரம்பின.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 177 ஏரிகள் 100 விழுக்காடு நிரம்பின. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் காலை 08.30 மணி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 6 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்- மைசூரு சதாப்தி, சென்னை சென்ட்ரல்- கோவை விரைவு ரயில்கள், சென்னை சென்ட்ரல்- பெங்களூரு பிருந்தாவன் ரயில், சென்னை சென்ட்ரல்- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.