
சென்னையில் மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
தொடர் கனமழை காரணமாக, சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் காட்சியளிக்கிறது. தி.நகர், மேற்கு மேம்பாலம், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை ஆகிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை அடுத்த ஆவடியில் 28 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 20 செ.மீ. மழையும், வளசரவாக்கத்தில் 20 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தொடர் கனமழையால், பெருங்குடியில் 18 செ.மீ. மழையும், சோழிங்கநல்லூரில் 17 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் இருந்து 130 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மிக்ஜாம் புயல் வேகமெடுத்து நகர்ந்து வருவதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வடபழனி 100 அடி சாலையில் சொகுசுப் பேருந்து மீது பழமையான மரம் முறிந்து விழுந்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக, சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.