இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய மீன்பிடிப் படகின் மீது இலங்கைக் கடற்படையினரின் ரோந்து படகு மோதியது குறித்து தனது ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர், இத்துயர சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் என்றும், ஒரு மீனவரை காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதி, மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், மீனவர் மலைச்சாமி உயிரிழந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக் கடற்படை அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த சம்பவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மீனவர் பிரச்சனைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காண வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.