டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை


தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே. நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பரபரப்பை ஏற்படுத்திய நியமனம்
”தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் திரு. வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தமிழ்நாட்டில் பல்வேறு விவாதங்களை உருவாக்கி, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது
தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக நிலைகள் பற்றிய புரிதலோ அல்லது தமிழகத்தின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் போதிய புரிதலோ இல்லாத ஒருவரை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
முதலமைச்சருக்கு வேண்டுகோள்
எனவே, மக்களின் இந்த மனநிலையைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த நியமனத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டின் பின்புலமும் தகுதியும் வாய்ந்த பொருத்தமான ஒருவரைப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
