- Advertisement -
விழுப்புரம் அருகே விவசாயி வீடு மற்றும் நிலத்தை சுற்றி, தனியார் கல்குவாரி உரிமையாளர் கம்பிவேலி அமைத்து அவர்களை வெளியேற முடியாமல் தடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கம்பி வேலியை தாண்டி சென்றால் மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் விவசாயி புகார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா நல்முக்கால் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவர்களது குடும்பம் கிராமத்தில் உள்ள 7 ஏக்கர் நஞ்சை நிலத்தில் குடிசை வீடு கட்டிக்கொண்டு, குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகினறனர்.
இங்கு மூன்று தலைமுறைகளாக அவர்களது குடும்பம் வசித்து வருகிறது. இவரது பிள்ளைகள் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் , செல்வத்தின் விவசாய நிலத்திற்கு அருகில் ஒருவர் கல்குவாரி மற்றும் கிரஷர் ஆரம்பித்துள்ளார். பின்னர் காலப் போக்கில் குவாரியை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் சீர்குலைந்தன. இதனால் அங்கு விவசாயம் செய்து வந்தவர்கள் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, அவர்களை நிர்பந்தித்து அனைத்து நிலங்களையும் கிரஷர் உரிமையாளர் கூடுதல் விலை கொடுத்து வாங்கிவிட்டார். எனினும், செல்வம் குடும்பத்தினர் தங்களுடைய பூர்விக நிலத்தை விற்பனை செய்ய மறுத்து அங்கேயே குடியிருந்து வருகின்றனர்.

செல்வம் குடும்பத்தினர் நிலத்தை விற்பனை செய்யாததால் ஆத்திரமடைந்த கல் குவாரி, கிரஷர்களின் முதலாளி குண்டர்களை வைத்து மிரட்டியுள்ளார். மேலும், செல்வம் நிலத்தை சுற்றிலும், அவர்கள் வெளியேற முடியாத வகையில் முள்கம்பி வேலி போட்டு தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வம் குடும்பத்தினர் கடைகளுக்கோ, மருத்துவமனைக்கோ செல்ல முடியாமல் தங்களுடைய நிலத்திற்குள் அடைபட்டுள்ளனர். மேலும், அவர்களது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு அதிகாரிகள், காவல்துறைக்கு பல முறை புகார் அளித்துள்ளார். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய விவசாயி செல்வம், தங்கள் நிலத்தை விற்பனை செய்யாததால், கிரஷர் உரிமையாளர் தங்கள் நிலத்தை சுற்றியுள்ள மற்ற நிலங்களை எல்லாம் விலைக்கு வாங்கி, கம்பிவேலி போட்டு அடைத்துவிட்டாகவும், இதனால் தாங்கள் திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கம்பி வேலியை பிரித்துக் கொண்டு சென்றால், கம்பிவேலியில் மின்சாரத்தை பாய்ச்சி அனைவரையும் கொன்றுவிடுவதாக குவாரி உரிமையாளர் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள விவசாயி செல்வம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் எனறு கோரிக்கை விடுத்துள்ளார்.