அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மூன்றாம் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்து மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
மன்னார்குடி தொகுதியில் இருந்து 3வது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டிஆர்பி.ராஜா. அமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.