ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு ரூ.4000 விநியோகம் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை புகார் அளித்துள்ளார். அண்ணா சத்யா நகரில் வீடு, வீடாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உதவியாளர்கள் பணம் விநியோகம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேபோல் இடைத்தேர்தலில் வாக்களிக்க வருவோருக்கு திமுகவினர் பணம் வழங்குவதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். அசோகபுரம் வாக்குச்சாவடி எண் 38-ல் வெளிமாவட்ட திமுகவினர் இருப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக திமுக செயல்பட்டுவருவதாக அதிமுகவினர் புகார் எழுந்துள்ளனர். ஆதார் அட்டைகளை ஆவணமாக ஏற்க மறுப்பதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் EVM இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவிற்கு ஓட்டு விழுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழைய ரயில்வே காலனி வாக்குச்சாவடியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறவே வாய்ப்புள்ளது. திருமங்கலம் பார்முலாவைவிட 20 மடங்கு அதிகமான பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி, “ஈரோடு கிழக்கில் யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் வாங்காமல் வாக்களிப்பதற்கான மனநிலை மக்கள் மாற வேண்டும்” என்று தெரிவித்தார்.
