மாநில அரசை ஆட்டிப்படைக்கும் ஏஜென்ட் ஆளுநர்- துரைமுருகன்
காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா? யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள். பாஜகவாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்துவிடுங்கள் என ஆர்.என்.ரவியை அமைச்சர் துரைமுருகன் சாடினார்.
ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் துரைமுருகன், “சிறிதும் காழ்ப்பணர்ச்சியின்றி, நாகரீகத்தோடு இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளுநர் பதவி தேவையில்லை என்பதை திமுக பலமுறை வலியுறுத்தியுள்ளது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள்தான் தகராறு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மீண்டும் தாமதித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேரவை கூடி முடிவெடுக்கும்.
ஆளுநர் தொடர்பான தீர்மானம் கொண்டுவருவதை அறிந்தே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஆளுநர் சென்னா ரெட்டி குறித்து விவாதிக்க சட்டப்பேரவை விதிகளை திருத்திய அதிமுக, இப்போது வெளிநடப்பு செய்வது வேடிக்கையாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதி கலைஞர், பாதி அண்ணா. பாஜகவாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள்… சென்னாரெட்டி தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது ஒரு முறை பாண்டிச்சேரியில் இருந்து அவர் திரும்பி கொண்டிருந்தபோது அவரை அவமதிக்கும் வகையில் அவர் மீது கற்களை வீசி எறிந்தது போல நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் கண்ணியமானவர்கள். குடியரசு தின விழாவில் ஆளுநர் மாளிகையில் ஒளிபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை. காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா? யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள். பாஜகவால் இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள்.
மாநில அரசை ஆட்டிப்படைப்பதற்கும், அரசியல் சட்டம் 356-ஐ பயன்படுத்தி கலைப்பதற்கும் தங்களுக்கு ஒரு ஏஜென்ட் வேண்டும் என ஒன்றிய அரசு, இந்த கவர்னர் பதவியை உருவாக்கி கொடுத்தார்கள். கணத்த இதயத்தோடு தான் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். ஆட்சிக்கு வருவோம் என தெரியும் முன்னே ஆளுநர் தேவையில்லை என்று கூறியது திமுக. மாநில அரசை ஆட்டிபடைக்க ஒரு ஏஜென்ட் தேவை என்பதால் ஆளுநர் பதவியை உருவாக்கியது மத்திய அரசு” என்றார்.