அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸின் இடையீட்டு மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் போட்டிபோட்டு அறிவித்துள்ளன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்கள் தரப்பிற்கு ஒதுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீடு மனு மீதான விசாரணை மட்டுமே நடைபெறுமே தவிர அதை தாண்டி வேறு எந்த ஒரு விவகாரத்திற்குள்ளும் நாங்கள் செல்ல மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனிடையே அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நிலுவையில் இடைக்கால உத்தரவை விரைந்து வழங்க வேண்டும், தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி, பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையில் ஆணையத்தை வழக்கில் சேர்க்க அனுமதி வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமியின் மனு மீது 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரரக சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
