Homeசெய்திகள்தமிழ்நாடுமதிமுகவிற்கு பம்பர சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

மதிமுகவிற்கு பம்பர சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

-

மதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் பம்பர சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது மதிமுக. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். இதனையடுத்து பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி மதிமுக தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே கடிதம் அளித்திருந்தது. இந்த மனுவை உடனடியாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இதனை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ஒப்புதல் அளித்து இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து மதிமுகவிற்கு இன்று பம்பர சின்னம் வழங்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றம் நேற்று விசாரித்தது. இதனையடுத்து மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை இன்று பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை என்பதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது இரண்டு தொகுதி அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை போட்டியிடும் கட்சிக்கு ஒரே சின்னம் கேட்டால் ஒதுக்க முடியும் ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக போட்டியிடுவதால் அவர்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

MUST READ