ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 82,138, பெண் வாக்காளர்கள் 88,037, மூன்றாம் பாலினத்தவர் 17 என மொத்தம் 1,70,192 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் மாலை 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்கள் 6 மணிக்குள் வாக்களிக்க முடியாததால் அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக ராஜாஜிபுரம் வாக்குச்சாவடி மையத்தில் 368 வாக்காளர்கள் 6 மணிக்கு முன்னதாக வந்திருந்த நிலையில் வாக்குப்பதிவு நேரம் முடியும் மாலை 6:00 மணிக்கு அவர்கள் வாக்களிக்க முடியாததால் அவர்களுக்கு வாக்குச்சாவடி மைய தேர்தல் அலுவலர்களால் டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் வாக்காளர்கள் ஆறு மணிக்கு பிறகும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்தனர். பின்னர் அந்த வாக்குச்சாவடி மையத்தில் இரவு 9:30 மணிக்கு அனைத்து வாக்காளர்களும் வாக்களித்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், “மொத்தம் 74.79 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடி மையத்தில் எந்த ஒரு பிரச்சனையோ, சர்ச்சையோ இல்லை. இது குறித்து அங்கிருந்த வாக்காளர்களிடம் விசாரித்த போது மாலை நேரத்தில் வந்தால் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் காலையில் வாக்களிக்காமல் இருந்து விட்டோம் என்று கூறியிருந்தனர். அப்பகுதி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லீப் வழங்கப்பட்டது. உரிய ஆவணங்களை வைத்து தான் வாக்கு செலுத்தியுள்ளனர். அந்த விசாரணையில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை. தேர்தல் நடந்த நேற்று எந்த ஒரு தேர்தல் விதி மீறல் வழக்குகளும் பதிவு செய்யவில்லை. இந்த தேர்தல் சவால் நிறைந்ததாகவே இருந்தது. இடைத்தேர்தல் என்பதால் அனைவரும் கவனித்து கொண்டு இருந்தார்கள். மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதனால் இதுவரை இந்த தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது” எனக் கூறினார்.
