ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு திமுக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் கணிப்பு ஆய்வு முடிவுகளை பேராசிரியர் டாக்டர் ராஜநாயகம் மற்றும் துணை இயக்குனர் சிறுமலர் ஜெகன் இணைந்து வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் பேசியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஜனவரி 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 118 இடங்களில் 1,470 வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 7 வகைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு திமுக முன்னிலையில் உள்ளது. திமுக 59.5%, நாம் தமிழர் கட்சி 16.7 %, பிற வேட்பாளர்கள் 1%, நோட்டா 2.3%, வாக்களிக்க விருப்பமில்லை 17.6% எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் முடிவில் திமுகவின் ஆதரவு 70 விழுக்காட்டைத் தாண்டும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தனர்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தாம் விரும்பும் கட்சி மற்றும் முதல்வர் குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களின் கருத்துக்கள் தெரிவித்தனர். அதிகபட்சமாக திமுக 33.3%, அதிமுக 19.4%, தமிழக வெற்றி கழகம் 18.7%, நாம் தமிழர் கட்சி 11 %, பாஜக 3.5% என தெரிவித்தனர். 2026 தேர்தலில் முதல்வராக விரும்பும் தலைவர் என்ற கேள்விக்கு, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – 31.5%, எடப்பாடி பழனிச்சாமி – 20.2%, விஜய் – 19.6%, சீமான் -8%, அண்ணாமலை – 7.9% என்று தெரிவித்துள்ளனர். பெரியார் குறித்த ஊடங்களில் பரவலாக நடைபெறும் விமர்சனம் மோதல்கள் வாக்காளர்கள் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் ஆதரவு 70 விழுக்காட்டைத் தாண்டும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.