அதிமுக- பாஜக தெளிவில்லாத கூட்டணி- ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பாஜக- அதிமுக தெளிவில்லாத கூட்டணி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “இடைத்தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி முதலமைச்சரின் இரண்டாண்டு ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த நற்சான்று. மேலும், பாஜக அதிமுகவும் தெளிவில்லாமல் சலனத்துடன் இருந்தனர். சில இடங்களில் பாஜக கொடியை கூட பயன்படுத்த அதிமுக தயாராக இல்லை. இதெல்லாம் சேர்ந்து தான் வெற்றியை எளிதாக கொடுத்துள்ளது” எனக் கூறினார்.
பதவியேற்பது எப்போது?
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் சுமூகமாக நடந்தது, நியாயமாக நடந்தது என வேட்பாளர் தென்னரசே சொல்லியிருந்தார். ஆனால் தோல்வியை சந்தித்த பின் பணம் தான் வென்றது என எடப்பாடி சொல்லிக் கொடுத்த மாதிரி குற்றம்சாட்டுகிறார். விரைவில் பதவியேற்க உள்ளேன். எம்.எல்.ஏ.ஆக பதவியேற்பது எப்போது என்பதை சபாநாயகர் அறிவிப்பார். இப்போது சட்டப்பேரவை தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை சிறப்பாகவே செயல்படுகிறார். அதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.