“போலி டாக்டர் பட்டம் ரூ.25,000க்கு விற்பனை”
போலி டாக்டர் பட்டம் ரூ.25,000க்கு விற்பனை செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 26 ஆம் தேதி கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் இன்டர்நேஷனல் ஆன்ட்டி கரப்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என சர்ச்சை எழுந்தது. இதில் ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகமும் கலந்து கொண்டார். தனியார் அமைப்பு சார்பில் கொடுத்த இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வில் பிரபலங்கள் உட்பட 40 பேர் வாங்கி ஏமாந்துள்ளனர்.

இந்நிலையில் போலி கெளரவ டாக்டர் பட்டம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய பிரபலங்களின் பெயர்களை விளம்பரத்திற்காக பயன்படுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. புரோக்கர்கள் மூலம் டாக்டர் பட்டம் பெற ஆட்களை பிடித்து பணம் வசூலிக்கப்பட்டதாகவும் 4 நிகழ்ச்சிகள் மூலம் 100க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.