திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தரையிறங்க முடியாமல் 1 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்துகொண்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 5.40 மணி அளவில் 144 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. அப்போது, விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்சனை காரணமாக சக்கரங்கள் உள்ளே இழுக்கப்படவில்லை. இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை தரையிறக்க முடியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
முன்னெச்சரிகை நடவடிகையாக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.