Homeசெய்திகள்தமிழ்நாடுகுதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரணடைந்தார்!

குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரணடைந்தார்!

-

- Advertisement -

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்து பிணைச் தொகையைச் செலுத்தினார்.

செந்தில் பாலாஜி

we-r-hiring

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக சென்னை திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 14 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் கடுமையான நிபந்தனைகள்

முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில்:

  • உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் சரணடைய வேண்டும்.

  • ரூ.25,000-க்கான சொந்தப் பிணை மற்றும் அதே தொகைக்கான இருநபர் பிணை செலுத்தப்பட வேண்டும்.

  • மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:30 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்.

நீதிமன்றத்தில் சரணடைவு

உயர் நீதிமன்றத்தின் இந்த நிபந்தனைகளுக்கு இணங்க, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நேரில் சரணடைந்து உரிய பிணைத் தொகையைச் செலுத்தினார்.

பிணையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி நாளை காலை 10:30 மணி மற்றும் மாலை 5:30 மணிக்குத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி கையெழுத்திடுமாறு உத்தரவிட்டார்.

சகோதரர் அசோக்குமார் திங்கள்கிழமை சரணடைவு?

இவ்வழக்கில் தொடர்புடைய செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், வேறொரு வழக்கு விசாரணைக் காரணமாக கரூரில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால், அவர் வரும் திங்கள்கிழமை அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்து பிணை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் முத்திரையை அழிக்கிறாரா விஜய்? – திமுக திட்டங்களின் பெயர்கள் வரிசையாக மாற்றம்: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் விவாதம்!

MUST READ