பெண் எஸ்.பி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிந்துவாழ்ந்து வரும் அவர் மனைவி பியூலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபி யாக பணியாற்றியவர் ராஜேஷ்தாஸ். அவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி க்கு பாலியியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ்க்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மூன்றான்டு சிறை தண்டணை வழங்கியது.
இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் மேல் முறையீடு செய்தார். மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடூ செய்துள்ளதை காரணம் காட்டி கைது செய்வதற்கு தடையாணை பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ராஜேஷ்தாஸ் மனைவியும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பியூலா வெங்கடேசன் ராஜேஷ்தாஸ்சை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பியூலா வெங்கடேசனின் பண்ணை வீடு 2 ஏக்கர் 70 சென்ட் பரப்பளவில் கேளம்பாக்கம் அடுத்த தையூர் கிராமத்தில் உள்ளது.
இந்த பண்ணை வீட்டில் கடந்த வாரம் ராஜேஷ்தாஸ் அத்துமீறி காவலாளியை தாக்கிவிட்டு உள்ளே நுழைந்ததாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ராஜேஷ்தாஸ் மனைவி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் 505(1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கரணை போலீசார் ராஜேஷ்தாஸை கைது செய்து துணை ஆணையரின் காரில் அழைத்து வந்து 5 மணி நேரம் விசாரணை செய்தனர்.
அப்போது தனது வழக்கறிஞர் வரவேண்டும் என்று ஆவணங்களில் கையெழுத்திடாமல் தர்ணா செய்தார். இதனால் தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் அவரை சமாதனப்படுத்தினார்கள். ஆனாலும் காவல் துறையினர் மீது ராஜேஷ் தாஸ் ஆக்ரோஷம் அடைந்ததாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் மதியம் சைவ சாப்பாட்டு ஏற்பாடு செய்து கொடுத்தனர். மேலும் புதிய துணிகளையும் வாங்கி கொடுத்துள்ளனர். ஏற்கனவே தன் கொண்டுவந்த சூட்கேஸ்சில் துணிகள் இருந்த நிலையில் மூன்று மணியளவில் திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து திருப்போரூர் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.