புதுச்சேரியில் நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை, மகாத்மா காந்தி சாலை, இந்திரா காந்தி சதுக்கம், புஸ்ஸி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

கனமழையால் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதேபோல், நூறடி அடி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தற்காலிகமாக சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மழைநீர் முழுமையாக வெளியேற்றிய பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்து உள்ளனர். இதேபோல் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், சூரியகாந்தி நகர் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனிடையே, அதிகனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


