குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான 3 மாத காலத்தில் சீசன் களை கட்டும். அப்போது மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.

அண்மையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 3ஆம் தேதி தண்ணீர் வரத்து குறைந்ததால் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.