Homeசெய்திகள்தமிழ்நாடுஅதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக கட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை - பாலகிருஷ்ணன்

அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக கட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை – பாலகிருஷ்ணன்

-

K Balakrishnan

அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக ஆட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஆசியுடன், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்த தரம் குறைந்த நிலக்கரியை, மூன்று மடங்கு அதிக விலைக்கு வாங்கியதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருப்பது புதிய ஆவணங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது அதானியின் துறைமுகத்திற்கு ஒரு ச.மீ., 1 ரூபாய் என மிகக் குறைந்த விலையில் ஏராளமான நிலம் அள்ளித் தரப்பட்டது. 2014 ஒன்றிய ஆட்சியில் பிரதமர் மோடி அமர்ந்த பின்னர் கள்ளக்கூட்டு முதலாளித்துவ நடவடிக்கைகள் புதிய உச்சத்தை தொட்டன. உலக பணக்காரர்களில் 650 வது இடத்தில் இருந்த அதானி ஏராளமான சொத்துக்களை குவித்து உலகின் முதல் பணக்காரர்கள் பட்டியலுக்கு சென்றார்.

இந்த காலகட்டத்தில் அதானி தொடர்பாக வந்த ஏராளமான ஊழல்கள் முழுமையான விசாரணையின்றி உள்ளன. அதில் மிக முக்கியமான ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழலாகும். புதிதாக வெளிவந்துள்ள ஆவணங்களின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி விற்பனை செய்ததில் மெகா ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு பல லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை அதானி வாங்கிக் கொடுத்துள்ளார். இடைத்தரகராக மட்டும் இருந்துகொண்டு குறைந்த விலையில் வாங்கிய தரமற்ற நிலக்கரியை தரமானது என்று அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறார். ஓ.சி.சி.ஆர்.பி என்ற இணையதளம் வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி இந்தோனேசியாவில் நிலக்கரி வாங்கப்பட்ட விலை மற்றும் அதன் தரம் தொடர்பான அனைத்தும் அம்பலத்திற்கு வந்துள்ளன.

கே.பாலகிருஷ்ணன்

அதன்படி 2014 ஆம் ஆண்டில் ஜான்லின் என்ற நிறுவனம் 3500 கிலோ கலோரி தரம் கொண்ட நிலக்கரியை இந்தோனேசிய சுரங்கங்களில் இருந்து ஒரு மெட்ரிக் டன் 28 டாலர் என்ற விலையில் வாங்கியுள்ளது. அதே நிலக்கரியை அதானி நிறுவனம் 6000 கிலோ கலோரி என ஆவணங்களை மாற்றி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒரு மெட்ரிக் டன் 91 டாலர் விலைக்கு விற்றுள்ளது. இதன் மூலம் ஒரு டன்னுக்கு 60 டாலர் அதானி நிறுவனம் கொள்ளையடித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் 24 முறை இதுபோல கப்பல்களில் நிலக்கரி வந்திருப்பதாக ஓ.சி.சி.ஆர்.பி திரட்டிய ஆவணங்கள் காட்டுகின்றன.

ஓராண்டில் 15 லட்சம் டன் அளவிற்கு நிலக்கரி விற்பனையில் ரூ.6 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெறும் நிலக்கரி வியாபாரத்தில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மெகா ஊழலால் தமிழ்நாடு மின்சார வாரியம் கடனில் மூழ்கி மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. மேலும் நஷ்டத்தை ஈடு செய்ய மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் தலையில் தொடர்ந்து சுமை ஏற்றப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்தியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்களுக்கு சுகாதார கேடுகளும் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இத்தகைய தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியதற்கு அதிமுக – பாஜக ஆட்சியாளர்கள் முழுமையான பொறுப்பேற்க வேண்டும். அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக கட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை. எனவே, தரமற்ற நிலக்கரியை கூடுதல் விலை கொடுத்து வாங்கிய கூட்டுக் கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதானி நிறுவனத்தின் மீதும், சம்பந்தப்பட்ட அஇஅதிமுக – பாஜக ஊழல் பேர்வழிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை அபராதத்துடன் வசூலிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

MUST READ